அரசு பள்ளிகளில் 31 ஆயிரம் பேருக்கு பணி இடமாறுதல்

அரசு பள்ளிகளில் 31 ஆயிரம் பேருக்கு பணி இடமாறுதல் வழங்கப்பட்டு இருப்பதாக மந்திரி மது பங்காரப்பா கூறினார்.
மண்டியா:-
பயிற்சி முகாம்
மண்டியாவில் மாவட்ட நிர்வாகம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான 3 நாட்கள் பயிற்சி முகாம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. நேற்று அதன் நிறைவு விழா மண்டியா டவுனில் உள்ள அம்பேத்கர் பவனில் நடந்தது. இதில் பள்ளிக்கல்வி துறை மந்திரி மது பங்காரப்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், 'மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் கலாசாரத்தில் தங்களது கவனத்தை செலுத்தி முழுமையான, அதாவது பரிபூர்ண மனிதனாக உருவாக வேண்டும்' என்று கூறினார். பின்னர் அவர் அரசு பள்ளிகளுக்கு முதலுதவி சிகிச்சைக்காக மருந்து மற்றும் மருத்துவ தொகுப்புகளை வழங்கினார். மேலும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பல்வேறு தகவல்கள் அடங்கிய கையடக்க புத்தகத்தையும் வெளியிட்டார்.
பின்னர் அவர் ஹொசஹள்ளி கிராமத்திற்கு சென்றார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
முட்டை வழங்கும் திட்டம்
அதாவது அரசு சார்பில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டது. அந்த திட்டத்தை தான் நேற்று மந்திரி மது பங்காரப்பா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது அவர் ஒரு மாணவிக்கு சாப்பாட்டை ஊட்டியும் விட்டார்.
இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி செலுவராயசாமி, மாவட்ட கலெக்டர் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ், எம்.எல்.ஏ.க்கள் ரவிக்குமார், ரமேஷ்பாபு பண்டிசித்தேகவுடா, தர்ஷன் புட்டணய்யா உள்பட பலர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
பணி இடமாறுதல்
பின்னர் மந்திரி மது பங்காரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'அரசு பள்ளிகளில் பணி இடமாறுதல் கோரி 90 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 31 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி பணி இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கும் விரைவில் பணி இடமாறுதல் வழங்கப்படும்' என்றார்.






