'பிரதமர் மோடியை நம்புங்கள்; வன்முறையை கைவிடுங்கள்'; இளைஞர்களுக்கு ஜே.பி.நட்டா வேண்டுகோள்


பிரதமர் மோடியை நம்புங்கள்; வன்முறையை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு ஜே.பி.நட்டா வேண்டுகோள்
x

அக்னிபத் புரட்சிகரமான திட்டம் என்றும், பிரதமர் மோடியை நம்புங்கள், வன்முறையை கைவிடுங்கள் என்று இளைஞர்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிக்கமகளூரு

அக்னிபத் புரட்சிகரமான திட்டம் என்றும், பிரதமர் மோடியை நம்புங்கள், வன்முறையை கைவிடுங்கள் என்று இளைஞர்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'அக்னிபத்' திட்டம்

ராணுவத்துக்கு ஆள்சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் ரெயில்கள், பஸ்களை தீயிட்டு கொளுத்தி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். 4-வது நாளாக நேற்றும் வடமாநிலங்களில் போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் கர்நாடகம் வந்துள்ள பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சித்ரதுர்காவில் 'அக்னிபத்' திட்டம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடியை நம்புங்கள்

ராணுவத்துக்கு ஆள்சேர்க்க கொண்டு வந்த புதிய திட்டம் தான் அக்னிபத். இது ஒரு புரட்சிகரமான திட்டம் என்பதை எனது இளம் நண்பர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். உலக அளவில் இந்திய ராணுவத்தை வலுவான நிலையில் வைக்க இது புரட்சிகரமான நடவடிக்கை. அதை நாம் புரித்துகொள்ள வேண்டும். சில தீயசக்திகள் சீர்திருத்தங்களையோ, மாற்றத்தையே விரும்பவில்லை. இந்த திட்டம் குறித்து இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இளைஞர்கள் வன்முறையை கைவிடுங்கள். பிரதமர் மோடியை நம்புங்கள்.

அக்னிபத்தில் இருந்து வெளிவரும் அக்னிவீரர்கள், உலகத்தின் முன் தங்களை நிலைநிறுத்தி கொள்வதன் மூலம் நாட்டை காப்பதில் பெயர் பெற்றவர்களாக விளங்குவர்.

போலீஸ் பணிகளில் முன்னுரிமை

இளைஞர்கள் இந்த திட்டத்தை ஆழமான புரிந்துகொள்ள வேண்டும். 17 வயதில் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கை மாற்றத்திற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்குகிறது. ராணுவத்தில் பெறும் பயிற்சி, பிற்காலத்தில் அரசு பணிகளில் சேரவும் உதவும். மாநிலத்தில் போலீஸ் பணிகளுக்கான ஆள்சேர்ப்பில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக பல மாநிலங்கள் கூறியுள்ளன. அதில் கர்நாடகமும் ஒன்று.

இது ஒரு பெரிய வாய்ப்பு. வன்முறை பாதையில் செலும் இளைஞர்கள் விவாத பாதையை தேர்ந்தெடுப்பதை நான் விரும்புகிறேன். உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக எல்லாவற்றையும் ஆழமாக தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முயற்சி செய்கிறேன். மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எப்போதும் நாட்டின் நலன் மற்றும் இளைஞர்களின் நலன் பற்றியே சிந்திக்கிறது. இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த திட்டம் பற்றி கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்களுக்கு பா.ஜனதா தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

தேசிய பாதுகாப்பு

தேசப்பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளாக ஆற்றிய பணியை வேறு எந்த பிரதமராலும் செய்ய முடியவில்லை. முன்காலத்தில் நம் வீரர்கள் எல்லையை சென்றடைய 3 நாட்கள் ஆகும். சரியான நேரத்துக்கு வீரர்களால் செல்ல முடியாமல் இருந்தது. தற்போது, கடந்த 8 ஆண்டுகளில் எல்லைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் நம் வீரர்கள் 24 மணி நேரத்திற்குள் எல்லைக்கு சென்ற போருக்கு தயாராக முடியும்.

இதுவரை யாராலும் சீனாவை எதிர்த்து நிற்கமுடியவில்லை. ஆனால் நாம் எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் சீனாவை எதிர்த்து நிற்கிறோம். மற்ற நாடுகளின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க எங்களுக்கு ஆர்வம் இல்லை, ஆனால் இந்தியாவை யாரும் தவறான நோக்கத்துடன் பார்க்க முடியாது என்று உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி தெளிவான செய்தியை தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு என்பது மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது.

இதற்கு முன்பு எந்த அரசாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழி தாக்குதல் நடத்தியது பற்றி உங்களால் கூற முடியுமா?. பாகிஸ்தானுக்கு எதிராக தகுந்த பதிலடி கொடுத்தது நரேந்திர மோடி அரசு தான். முன்பு கார்கில் போர் நடத்தியது கூட வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா அரசு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாமரை மலரும்

இதையடுத்து சித்ரதுர்காவில் நடந்த கிராம பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர்கள் கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு பேசுகையில், கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி ஆட்சி அமைக்கும். கர்நாடகத்தில் தாமரை மீண்டும் மலரும். அதற்காக கட்சி தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மந்திரிகள் கோட்டா சீனிவாச பூஜாரி, பி.சி.பட்டீல், ஸ்ரீராமுலு மற்றும் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story