ஜே.டி.எஸ். வேட்பாளரிடம் வேட்பு மனுவை வாபஸ் பெற கூறிய மந்திரி சோமண்ணா


ஜே.டி.எஸ். வேட்பாளரிடம் வேட்பு மனுவை வாபஸ் பெற கூறிய மந்திரி சோமண்ணா
x

சாம்ராஜ்நகர் தொகுதியில் வேட்பு மனுவை திரும்ப பெறும்படி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருடன் மந்திரி சோமண்ணா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு, ஏப்.27-

சோமண்ணா பேசும் ஆடியோ

கர்நாடக சட்டசபைதேர்தலில் மந்திரி சோமண்ணா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதாவது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும், சாம்ராஜ்நகர் தொகுதியிலும் சோமண்ணா போட்டியிடுகிறார். அதே நேரத்தில் சாம்ராஜ்நகரில் சோமண்ணாவை எதிர்த்து ஜனதா தளம்(எஸ்) (ஜே.டி.எஸ். கட்சி) சார்பில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனசாமி நிறுத்தப்பட்டுள்ளார். சாம்ராஜ்நகர் தொகுதியில் தனது சமூகத்தை சேர்ந்தவரையே ஜனதாதளம் (எஸ்) கட்சியும் நிறுத்தி இருப்பதால், சோமண்ணா எளிதில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுஇந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் மல்லிகார்ஜுனசாமியுடன் சோமண்ணா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேட்பு மனுவை திரும்ப பெற...

அதாவது அந்த ஆடியோவில் 'சாம்ராஜ்நகர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை திரும்ப பெற வேண்டும். நீங்கள் எனது நண்பர். யாருடைய பேச்சையோ கேட்டு எனக்கு எதிராக போட்டியிடுகிறீர்கள். முதலில் வேட்பு மனுவை திரும்ப பெற வேண்டும். உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பது எனது முழு பொறுப்பு.

அடுத்து நமது கட்சி தான் ஆட்சிக்கு வர உள்ளது. கார் கொடுக்கிறேன். என்னவெல்லாம் வேண்டுமோ செய்து கொடுப்பது எனது பொறுப்பு' என்று மந்திரி சோமண்ணா பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி இருக்கிறது.

பரபரப்பு

இதற்கு மல்லிகார்ஜுனசாமி பதிலளிக்கையில், 'நான் யாருடைய பேச்சை கேட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனுவை திரும்ப பெற வாய்ப்பில்லை. நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். நீங்கள் சொல்வதை கேட்டு செயல்படுவேன். நீங்கள் அடுத்த முதல்-மந்திரி' என்று சோமண்ணாவிடம் கூறுவது போன்று அந்த ஆடியோவில் இடம் பெற்றிருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மந்திரி சோமண்ணா வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி ஜனதாதளம் (எஸ்) வேட்பாளரிடம் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story