ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு சுப்ரீம் கோர்ட்டில் எதிர்த்து வழக்கு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியையும் சேர்த்து அவதூறாகப் பேசினார்.
இது தொடர்பாக குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி தொடுத்த வழக்கை சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா விசாரித்து, ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார். கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி வெளியான இந்தத் தீர்ப்பினால் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் குஜராத்தில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வர்மாவுக்கு செசன்ஸ் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 பேரின் பதவி உயர்வையும் எதிர்த்து சிவில் நீதிபதிகளான ரவிகுமார் மேத்தா, சச்சின் பிரதபிரயா மேத்தா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.