ஜூகு பீச் தூய்மைப்படுத்தும் பணி: தன்னார்வத்துடன் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்


ஜூகு பீச் தூய்மைப்படுத்தும் பணி:  தன்னார்வத்துடன் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்
x

மராட்டியத்தில் ஜூகு பீச்சில் விநாயகர் சிலைகளை கரைத்த பின்னர் கிடந்த கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் பள்ளி மாணவ, மாணவியர் தன்னார்வத்துடன் ஈடுபட்டனர்.

மும்பை,

இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கிய பண்டிகையாகும். அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பண்டிகைகளை வீட்டிலேயே மக்கள் கொண்டாடிய நிலையில், இந்த வருடம் பல்வேறு பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதேபோன்று, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்றவை. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ஆனந்த சதுர்த்தியுடன் நிறைவு பெறுகிறது. இதில், நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று பிரமாண்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் 1½, 3, 5, 7–ம் நாள் மற்றும் ஆனந்த சதுர்த்தி தினத்தன்று கடல் மற்றும் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கை குளங்களில் கொண்டு போய் கரைப்பார்கள்.

இதன்படி மும்பை ஜூகு பீச், மால்வாணி, வெர்சோவா, கடற்கரைகள் மற்றும் பவாய் ஏரி, குளங்கள் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி சிலைகள் கரைக்கப்பட்டன. எனினும், சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் விட்டு சென்ற குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடந்தன.

இதனை அகற்றும் பணி மும்பையின் ஜூகு பீச்சில் கிளீனத்தான் என்ற பெயரில் இன்று நடைபெற்றது. இதில், அரசு சாரா அமைப்புகள், மும்பை பெருநகர மாநகராட்சி, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.




Next Story