கடந்த 9 ஆண்டுகளில் ரூ.14½ லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்


கடந்த 9 ஆண்டுகளில் ரூ.14½ லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
x

பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், கடன் தள்ளுபடி விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தி.மு.க. துணைத்தலைவர் கனிமொழி எம்.பி., கடந்த 2014-ம் ஆண்டு முதல் வங்கிகள் தள்ளுபடி செய்த கடன்தொகை, இதில் பெருநிறுவனங்களின் கடன்தொகை விவரம் போன்றவற்றை கேள்வியாக எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத்கிஷன்ராவ் காரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:- பெரு நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்த விவரங்கள் ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் எஸ்.சி.பி. எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், கடன் தள்ளுபடி விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன.

அதன்படி 2014-2015 -ம் நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் கடன் ரூ.18 ஆயிரத்து 178 கோடி உள்பட ரூ.58 ஆயிரத்து 786 கோடியும், 2015-2016-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.70 ஆயிரத்து 413 கோடியும், 2016-2017-ம் நிதியாண்டில் ரூ.1,08,373 கோடியும், 2017-2018 ம் நிதியாண்டில் ரூ.1,61,328 கோடியும், 2018-2019 ம் நிதியாண்டில் ரூ.2,36,265 கோடியும், 2019-2020 ம் நிதியாண்டில் ரூ.2,34,170 கோடியும், 2020-2021 ம் நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியும், 2021-2022 ம் நிதியாண்டில் ரூ.1,74,966 கோடியும் 2022-2023 ம் நிதியாண்டில் ரூ.2,09,144 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

மொத்தமாக மேற்படி ஆண்டுகளில் ரூ.14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் பெருநிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான தள்ளுபடி தொகை ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ஆகும்.

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story