திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பள்ளி சிறுமியை 'துண்டுதுண்டாக வெட்டிவிடுவேன்' என மிரட்டிய இளைஞர்


திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பள்ளி சிறுமியை துண்டுதுண்டாக வெட்டிவிடுவேன் என மிரட்டிய இளைஞர்
x

17 வயதான பள்ளி சிறுமியை பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

லக்னோ,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா, அவரது காதலனான அப்தாப் பூனாவாலாவால் டெல்லியில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை அப்தாப் துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியெறிந்தார். கடந்த மே மாதம் நடந்த இந்த கொலை சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பள்ளி சிறுமியை 'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன்' என்று இளைஞன் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் மாவட்டம் ஷமன்கஞ்ச் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளியில் படித்து வருகிறார். சிறுமி பள்ளிக்கு செல்லும்போது அவரை அதேபகுதியை சேர்ந்த 21 வயதான முகமது பைஸ் என்ற இளைஞர் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார்.

மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பைஸ் சிறுமியை வற்புறுத்தியுள்ளார். ஆனால், முகமது பைஸ்சை திருமணம் செய்துகொள்ள சிறுமி மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பைஸ், திருமணம் நடைபெறவில்லையென்றால் உன்னை துண்டுதுண்டாக வெட்டிவிடுவேன்' என்று சிறுமியை மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டல் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது பைஸ்-ஐ கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால், முகமதுவின் குடும்பத்தினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். மோதல் அதிகரித்த நிலையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த முகமது பைசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story