நமது நாட்டில் நீதித்துறையின் நிலையை கண்டு வெட்கித் தலைகுனிகிறேன் - மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல்
தற்போதைய ஆட்சியானது 'எதிர்க்கட்சி-இல்லாத பாரதத்தை' விரும்புகிறது என்று கபில் சிபல் கூறினார்.
புதுடெல்லி,
நாட்டின் நீதித்துறையின் நிலையைக் கண்டு வெட்கித் தலைகுனிகிறேன் என்று மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான கபில் சிபல் கூறினார்.நீதித்துறையின் நிலையைக் கண்டு வெட்கித் தலைகுனிகிறேன்
சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கபில் சிபல் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், நீதித்துறையில் உள்ள சிலர் அமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள். சட்ட அமைப்பு மீறலை, கோர்ட்டு அடிக்கடி கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நான் 50 ஆண்டுகளாக அங்கம் வகிக்கும் நீதித்துறை, சட்டத்தின் விதி மீறல்களுக்கு கண்மூடித்தனமாக உள்ளது. சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு நிறுவனம், சட்டத்தை மீறுவதற்கு வெளிப்படையாகவே ஏன் அனுமதிக்கிறது என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
பேச்சு சுதந்திரம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் விளக்கத்திற்கு இடம் கொடுப்பது துரதிர்ஷ்டவசமானது. சட்டத்தை மீறிய, குற்றத்தின் கீழ் வராத பழைய டுவிட்டர் பதிவின் அடிப்படையில் முகமது சுபைரை கைது செய்ததை ஏற்க முடியாது.
நுபுர் சர்மா விவகாரம் மற்றும் உதய்பூர் படுகொலை போன்றவை, வெறுப்பு என்பது தேர்தல் ஆதாயத்திற்கான கருவியாக மாறியதால்தான் இவையெல்லாம் நடக்கின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சமூகத்தை பிளவுபடுத்தும் அரசியல் உத்தியின் ஒரு பகுதியாக வெறுப்பு மாறினால், உங்களுக்கு இதுபோன்ற பல நிகழ்வுகள் இருக்கும்.
இந்த ஏற்றுக்கொள்ள முடியாத மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்கள், குறிப்பிட்ட சமூகங்களை குறிவைக்கும் அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். சமூகங்களை ஒன்றிணைவதற்குப் பதிலாக பிளவுபடுத்தும் அவர்களின் திட்டத்தின் விளைவால் இவையெல்லாம் நடக்கின்றன.
முன்னால் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று அதை விட மோசமாக நிலைமை உள்ளது.
நாட்டில் "உண்மையான அவசரநிலை" இப்போது உள்ளது. அமலாக்கத்துறை போன்ற அரசு நிறுவனங்கள் நெறிக்கப்படுகின்றன. சட்டத்தின் ஆட்சியில் தினசரி வரம்பு மீறப்படுகிறது. தற்போதைய ஆட்சியானது 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' மட்டுமல்லாமல், 'எதிர்க்கட்சி-இல்லாத பாரதத்தை' விரும்புகிறது.
உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் இப்போது மராட்டியத்தில் அரசாங்கங்கள் கவிழ்ந்துள்ளன.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் கவிழ்க்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.