கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட நடிகர்-நடிகைகள், பிரபலங்கள்


கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட நடிகர்-நடிகைகள், பிரபலங்கள்
x
தினத்தந்தி 10 May 2023 6:45 PM GMT (Updated: 10 May 2023 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் நேற்று நடிகர்-நடிகைகள் மற்றும் பிரபலங்கள் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர்.

பெங்களூரு-

கர்நாடக சட்டசபை தேர்தலில் நேற்று நடிகர்-நடிகைகள் மற்றும் பிரபலங்கள் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர்.

பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்திநகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். இதுபோல் நடிகர் ரமேஷ் அரவிந்த் பெங்களூரு பனசங்கரியில் உள்ள பி.என்.எம். பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார்.

நடிகர் கணேசும் அவரது மனைவியும் பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஜவகல் ஸ்ரீநாத்

நடிகை உமாஸ்ரீ பாகல்கோட்டை மாவட்டம் திரதால் தொகுதிக்கு உட்பட்ட ராபகவி பகுதியில் அமைந்துள்ள அரசு உருது பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். நடிகர் வினோத் ராஜ் பெங்களூரு நெலமங்களா அருகே உள்ள மைலானஹள்ளி பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் நேற்று மைசூரு டவுன் குவெம்பு நகரில் உள்ள ஞானகங்கா பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அவர் வரிசையில் நின்று வாக்களித்தார். மைசூரு மாவட்ட தேர்தல் ஆணைய தூதுவராக இருந்து வரும் ஜவகல் ஸ்ரீநாத் முதல் முறையாக வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார்.

நடிகர் சுதீப்

நடிகர் டொள்ளு தனஞ்செய் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தொகுதிக்கு உட்பட்ட காலேனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார். நடிகை அமுல்யா தனது கணவருடன் ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

நடிகர் சுதீப் நேற்று பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி பிரியா, மகள் சான்வி ஆகியோரும் வாக்களித்தனர். பிரபல கன்னட நடிகரும், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனுமான சிவராஜ்குமார், நேற்று பெங்களூருவில் தனது மனைவி கீதாவுடன் சென்று ஓட்டுப்போட்டார்.

ராகிணி திவேதி

நடிகை ராகிணி திவேதி பெங்களுரு எலகங்கா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 212-ல் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி நேற்று உடுப்பி (மாவட்டம்) புறநகரில் உள்ள வாகுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து காரில் வந்தார். அவருடன் அவரது மனைவியும் வந்து வாக்களித்தார். வரிசையில் நின்று வாக்களித்த ரிஷப் ஷெட்டி, அங்கிருந்த வாக்காளர்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இதுபோல் நடிகர் துனியா விஜய் பெங்களூரு பசவனகுடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவர் தன்னுடன் தனது மகனை அழைத்து வந்திருந்தார். துனியா விஜய் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

மாளவிகா அவினாஷ்

நடிகை மாளவிகா அவினாஷ் மைசூரு டவுன் கிருஷ்ணமூர்த்திபுரம் பகுதியில் உள்ள குப்பச்சி பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார். இதுபோல் நடிகைகள் ரக்ஷிதா, ஹர்ஷிதா பூனச்சா, விஜய் ராவ் ஆகியோர் பெங்களூருவில் ஓட்டுப்போட்டனர். நடிகைகள் மேகனராஜ், கோமல் குமார், சப்தமி கவுடா, சுருதி ஆகியோர் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். நடிகர் யஷ் பெங்களூரு ஒசகெரேஹள்ளி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார்.

மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, அவரது அண்ணன் ராகவேந்திரா ராஜ்குமார், அண்ணி, நடிகர் உபேந்திரா ஆகியோரும் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட்டனர்.

பிரவீன் சூட்

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா தனது மனைவியுடன் பெங்களூரு ஹெப்பாலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெங்களூரு மாநகராட்சி முதன்மை கமிஷனருமான துஷார் கிரிநாத்தும் ஹெப்பாலில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார்.

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தனது மனைவி வனிதா சூட்டுடன் வந்து பெங்களூரு சர் எம்.விசுவேஸ்வரய்யா பி.யூ. கல்லூரியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயண் மூர்த்தி, தனது மனைவி சுதா மூர்த்தியுடன் வந்து பெங்களூரு பி.இ.எஸ். பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குசாவடியில் காலை 8.20 மணியளவில் வாக்கை பதிவு செய்தார்.

மன்னர் யதுவீர்

தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா அனுதானிகா பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். மைசூரு மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் மைசூரு கே.ஆர்.மொகல்லாவில் உள்ள ஸ்ரீகண்ட பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.


Next Story