2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது


2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. ஜெயின் துறவி கொலை குறித்து பிரச்சினை கிளப்ப பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 3-ந்தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து சட்டசபைக்கு சனி, ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த துறைகளின் விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை மந்திரியே பதிலளிப்பார். இன்றைய கூட்டத்தில் ஜெயின் துறவி கொலை குறித்து பிரச்சினை கிளப்ப பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

இந்த சட்டசபை கூட்டத்தொடர் 15-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டத்தொடரை 21-ந் தேதி வரை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. சபையின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தொடங்கி ஒரு வாரமாகிவிட்ட நிலையிலும் பா.ஜனதா இதுவரை எதிர்க்கட்சி தலைவா் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இதை அவ்வப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story