2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது


2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
x

பெங்களூரு விதான சவுதாவில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை மீண்டும் இன்று (திங்கட்கிழை) கூடுகிறது.

பெங்களூரு:

'அக்ரம-சக்ரம' திட்டம்

கா்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. கிராமப்புறங்களில் 'அக்ரம-சக்ரம' திட்டத்தில் பயனாளிகளின் வசதிக்காக விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க வகை செய்யும் கர்நாடக நில வருவாய் சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

வழக்கமான விடுமுறை

இந்த கூட்டத்தொடரில் இப்படி அர்த்தப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டம் கடந்த 16-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதால், சபை 19-ந் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் காகேரி அறிவித்தார். இந்த நிலையில் இந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது.

காலை 10 மணிக்கும் சட்டசபை கூடும்போது, கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படுகிறது. அதைத்தொடர்ந்து வெள்ள பாதிப்புகள் குறித்த விவாதத்திற்கு அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. சட்டசபை கூட்டத்தொடரை முன்னிட்டு விதான சவுதாவை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் வருகிற 23-ந் தேதியுடன் நிறைவடைகிறது.


Next Story