கர்நாடகாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.. வீட்டில் நடந்த சோதனையில் ரூ.6.10 கோடி சிக்கியது...! எம்.எல்.ஏ.வை கைது செய்ய போலீசார் தீவிரம்...!


கர்நாடகாவில்  பா.ஜனதா எம்.எல்.ஏ.. வீட்டில் நடந்த சோதனையில் ரூ.6.10 கோடி சிக்கியது...! எம்.எல்.ஏ.வை கைது செய்ய போலீசார் தீவிரம்...!
x
தினத்தந்தி 3 March 2023 12:01 PM GMT (Updated: 3 March 2023 12:13 PM GMT)

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தாவணகெரெ மாவட்டம் சென்னகிரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தவர் மாடால் விருபாக்ஷப்பா.

இவர், கர்நாடக மாநில சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரியத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த். இவர், கே.ஏ.எஸ். அதிகாரி ஆவார். தற்போது பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் முக்கிய கணக்கு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயன பொருட்கள் வழங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டு இருந்தது.

இந்த டெண்டரை எடுக்க பல்வேறு ஒப்பந்ததாரர்கள் இடடையே போட்டி ஏற்பட்டு இருந்தது. அப்போது ஒரு ஒப்பந்ததாரரிடம் டெண்டர் வழங்குவதற்கு ரூ.81 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி பிரசாந்த் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. அவ்வாறு ரூ.81 லட்சம் கொடுத்தால், அந்த டெண்டரை பெற்றுக் கொடுப்பதாகவும் பிரசாந்த் வாக்குறுதி அளித்தாக தெரிகிறது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பெங்களூரு கிரசென்ட் ரோட்டில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.வான விருபாக்ஷப்பாவின் அலுவலகத்தில் வைத்து ஒப்பந்ததாரரிடம் ரூ.40 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது அதிகாரி பிரசாந்தை லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தார்கள். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் லோக் அயுக்தா போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருந்தனர்.

இந்த சம்பவம் கர்நாடகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் அந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.1.62 லட்சமும் சில ஆவணங்களும் சிக்கி இருந்தது. அதாவது ஒட்டு மொத்தமாக எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவின் அலுவலகத்தில் இருந்து லஞ்ச பணத்துடன் சேர்த்து ரூ.2 கோடியே 2 லட்சம் சிக்கி இருந்தது. அவற்றை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்திருந்தார்கள்.

மேலும் கிரசென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்திலும், பெங்களூரு சஞ்சய்நகர் அருகே டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்திற்கு சொந்தமான வீட்டிலும் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள். அலுவலகம் மற்றும் வீட்டில் நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக 9½ மணிநேரம் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் பிரசாந்த் வீட்டில் மூளை, மூளையிலும் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு லோக் அயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்தார்கள். வீட்டில் பல்வேறு பகுதிகளில் பணம் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த பணத்தை 3 பைகளில் போலீசார் சேகரித்தனர். பின்னர் பணம் எண்ணும் எந்திரம் மூலமாக எண்ணப்பட்டது. அப்போது பிரசாந்த் வீட்டில் மட்டும் ரூ.6 கோடியே 10 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை போலீசார் பறிமுதல் செய்தார்கள். அதே நேரத்தில் பிரசாந்தின் வீடு, எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் இருந்து டெண்டர் மற்றும் பிற முறைகேடுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ரூ.40 லட்சம் லஞ்சம், வீடு மற்றும் அலுவலகத்தில் சிக்கிய ரூ.7.72 கோடி க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், லோக் அயுக்தா போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முதல் குற்றவாளியாக மாடால் விருபாக்ஷப்பாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2-வது குற்றவாளியாக பிரசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேர் மீதும் வழக்குப்பதிவாக இருக்கிறது. இதன் காரணமாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான விருபாக்ஷப்பா கைது செய்ய லோக் அயுக்தா போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


Next Story