கர்நாடக தேர்தல் : காங்கிரஸ் பேரணியில் திடீர் பணமழை! ரூ.500 நோட்டுகளாக பறந்தது
முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் 90க்கும் அதிகமான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
பெங்களூர்:
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சார்பில் பிரஜா திவானி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. 5 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வர உள்ள நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10 ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது.
கர்நாடக் தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், ஆம்ஆத்மி இடையே நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. இதுதவிர தெலங்கானா முதல் மந்திரி பிஆர்எஸ், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், மேலும் சில சிறிய கட்சிகளும் போட்டியிட உள்ளன. இருப்பினும் கர்நாடகா தேர்தலில் நான்கு கட்சிகளிடையே போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் 90க்கும் அதிகமான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
ஆம்ஆத்மி கட்சியும் 90 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் முதல் கட்டமாக 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பா.ஜ.க. இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. தேர்தல் தேதி இன்று வெளியான நிலையில் பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ், பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் பிரஜா திவானி பேரணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் பிரஜா திவானி பேரணி மேற்கொண்டார்.
டிகே சிவக்குமார் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது டிகே சிவக்குமார் திறந்த பஸ்சில் நின்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்த டிகே சிவக்குமார் பாஜக, மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளை விமர்சனம் செய்தார். மேலும் டிகேசிவக்குமார் பயணித்த திறந்த பஸ்சின் முன்பும், பின்பும் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர்.
மேளதாளங்கள் முழங்க, வழிநெடுகிலும் நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடந்தன. அப்போது டிகே சிவக்குமார் திடீரென்று 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து பஸ்சின் மேல் நின்றபடியே தூக்கி வீசினார். இதனால் யாத்திரையில் பணமழை பொழிந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி சர்ச்சையாகி உள்ளது.