கர்நாடக காங்.தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை


கர்நாடக காங்.தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை
x

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் ரொக்கம், தங்க ஆபரணங்கள், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் துமகூரு மாவட்டம் திப்தூருக்கு சென்றார். அவரது ஹெலிகாப்டர் திப்தூரில் தரை இறங்கியதும், அங்கு காத்திருந்த தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர்.

இருப்பினும் டி.கே.சிவக்குமார் ஹெலிகாப்டரை விட்டு இறங்கவே இல்லை. அதில் இருந்து பைகளை திறந்து பார்த்து அங்குலம், அங்குலமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பணம் உள்ளிட்ட எந்த பொருட்களும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் சோதனையை முடித்து கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கடந்த 16-ந்தேதி தான் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை காரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில், தேர்தல் அதிகாரிகள் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள், ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்தி வருவது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story