கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இமாலய வெற்றி


கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இமாலய வெற்றி
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் 1.23 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ஈட்டினார். அதுபோல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சித்தராமையா ஆகியோரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

பெங்களூரு:-

பசவராஜ் பொம்மை

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இதில் முக்கியமாக சிக்காவி தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு லட்சத்து 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் பதான் யாசீர் ரகமத் கானை 35 ஆயிரத்து 978 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் 13 ஆயிரத்து 928 வாக்குகள் பெற்றார்.

சித்தராமையா

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தான் போட்டியிட்ட வருணா தொகுதியில் வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணாவை 46 ஆயிரத்து 006 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சித்தராமையா மொத்தம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 430 வாக்குகள் பெற்றார். அந்த தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பாரதி சங்கர் ஆயிரத்து 34 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். இந்த தெகுதியில் பா.ஜனதாவும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் தன்னை வீழ்த்த ஒப்பந்தம் செய்திருப்பதாக சித்தராமையா குற்றச்சாட்டி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

டி.கே.சிவக்குமார் இமாலய வெற்றி

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பா.ஜனதா வேட்பாளரான வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 270 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இமாலய வெற்றியை ருசித்தார். டி.கே.சிவக்குமார் தான் இந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அந்த தொகுதியில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் டெபாசிட் இழந்துவிட்டன.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சென்னபட்டணா தொகுதியில் 96 ஆயிரத்து 592 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சி.பி.யோகேஷ்வரை 15 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சி.பி.யோகேஷ்வர் 80 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்றார். அந்த தொகுதியில் காங்கிரஸ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அக்கட்சி வேட்பாளர் கங்காதர் 15 ஆயிரத்து 374 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


Next Story