ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2 கோடி சிக்கியது


ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2 கோடி சிக்கியது
x

பாகல்கோட்டை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கதக்கில் ரூ.1½ கோடி மதிப்பிலான இன்சுலின் சிக்கி உள்ளது.

பெங்களூரு:

பாகல்கோட்டை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கதக்கில் ரூ.1½ கோடி மதிப்பிலான இன்சுலின் சிக்கி உள்ளது.

ரூ.2.10 கோடி சிக்கியது

கர்நாடக சட்டசபை தேர்தல மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா குன்னூரிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சோதனை சாவடி வழியாக வந்த ஒரு வாகனத்தை வழிமறித்து போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த வாகனத்தில் 2 பேர் இருந்தனர். மேலும் வாகனத்தில் கட்டுக்கட்டாக ரூ.2.10 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றி 2 பேரிடமும் விசாரித்த போது சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை.

கூட்டுறவு வங்கிக்கு சொந்தமானது

போலீசார் நடத்திய விசாரணையில் முதோலில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கிக்கு சொந்தமானது என்பதும், முதோலில் உள்ள வங்கியில் இருந்து பெலகாவி மாவட்டம் அதானியில் உள்ள அந்த வங்கியின் கிளை அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டதும் தெரிந்தது. பணத்தை எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ரூ.2.10 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து ஜமகண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல், கதக் மாவட்டம் நரகுந்து தாலுகா கலகேரி சோதனை சாவடிக்கு கோவாவில் இருந்து மராட்டிய மாநிலத்திற்கு சென்ற லாரியில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.1½ கோடிக்கு இன்சுலின் இருந்தது. அவற்றை எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.1½ கோடி மதிப்பிலான இன்சுலினை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து கலகேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story