இளம் வாக்காளர்களை கவர பசுமை வாக்குச்சாவடிகள்


இளம் வாக்காளர்களை கவர பசுமை வாக்குச்சாவடிகள்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இளம் வாக்காளர்களை கவருவதற்காக பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

பெங்களூரு:

பெங்களூருவில் இளம் வாக்காளர்களை கவருவதற்காக பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

75 சதவீத ஓட்டுப்பதிவு

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேநேரத்தில் கர்நாடகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் பெங்களூரு நகரில் சட்டசபை, நாடாளுமன்றம், மாநகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் குறைவான ஓட்டுப்பதிவே நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பெங்களூருவில் 75 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக வருகிற 10-ந் தேதி கண்டிப்பாக வாக்களிக்கும்படி கம்ப்யூட்டர் நிறுவனங்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு சென்று மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

பசுமை வாக்குச்சாவடிகள்

பெங்களூருவில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இளம்பெண்கள், பெண்களை கவருவதற்காக 'பிங்க்' நிற வாக்குச்சாவடிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெண் வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது. இதையடுத்து, சட்டசபை தேர்தலில் பெங்களூருவில் உள்ள இளம் வாக்காளர்களை கவரும் விதமாக பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் இளம் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக இந்த பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதாவது நகரில் உள்ள 28 தொகுதிகளிலும் இளம் வாக்காளர்களுக்காக தலா ஒரு பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் என அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

இந்த பசுமை வாக்குச்சாவடிகளில் வண்ண மயமான விளக்குகளால் அலங்கரீக்கப்படுகிறது. இதற்காக மின்வாரியத்துடன் தேர்தல் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதுதவிர வாக்குச்சாவடி மையங்களில் கூட்டம் இருப்பதால், அங்கு நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களிக்க பெங்களூரு நகரவாசிகள் விரும்பவில்லை என்பது பற்றிய தகவல்களும் அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தது. இதையடுத்து, வாக்குச்சாவடிகளில் கூட்டம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி அறிந்து கொள்வதற்காக புதிதாக செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

காத்திருப்போர் பற்றிய தகவல்

இந்த செல்போன் செயலியின் மூலமாக பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்போடுவதற்காக எவ்வளவு பேர் காத்திருக்கின்றனர், வாக்குச்சாவடி அருகே எந்த இடத்தில் வாக்காளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளும் வசதி உள்ளிட்டவற்றை பற்றி வாக்காளர்கள் தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் ஏதாவது ஒரு நபர் தான் ஓட்டுப்போட செல்லும் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமாக இருந்தால், கூட்டம் குறைந்த பின்பு வந்து ஓட்டுப்போட உதவியாக இருக்கும்.


Next Story