கர்நாடக சட்டசபை தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் - 2,613 வேட்பாளர்கள் போட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் - 2,613 வேட்பாளர்கள் போட்டி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 25 April 2023 4:44 AM IST (Updated: 25 April 2023 6:33 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 2,613 வேட்பாளர்கள் களத்தில் போட்டியில் உள்ளனர்.

பெங்களூரு,

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 2,427 பேர் ஆண்களும், 184 பேர் பெண்களும், 3-ம் பாலினத்தினர் 2 பேரும் அடங்குவர். கட்சிகளை பொறுத்தவரையில் பா.ஜனதா வேட்பாளர்கள் 224 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 223 பேரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 பேரும், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 209 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் 133 பேரும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். மேலும் பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் 704 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


Next Story