காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், இதை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கூறியிருக்கிறது. இது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்கள் செப்.12-ம் தேதி வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவை ஏற்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றது குறிப்பிடத்தக்கது.