கர்நாடகா: ராகுல் காந்தியின் தீவிர ரசிகர் நான்; காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார்


கர்நாடகா: ராகுல் காந்தியின் தீவிர ரசிகர் நான்; காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார்
x

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார் இன்று கலந்து கொண்டு பேசினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிர பணியாற்றி வருகின்றன. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரம், பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன.

தேர்தலில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க.வுடனான பேரணியில் சமீபத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான நடிகர் கிச்சா சுதீப் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சிவமொக்கா நகரில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

இந்த பேரணியில், மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் மற்றும் நடிகரான சிவராஜ்குமார் கலந்து கொண்டார். அவர் கூறும்போது, நான் ராகுல் காந்தியின் தீவிர ரசிகராக வந்திருக்கிறேன்.

சமீபத்தில் அவர் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி, நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன் என்று பேசியுள்ளார். நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.


Next Story