கர்நாடக தேர்தலில் களமிறங்கும் கோடீசுவர வேட்பாளர்கள்


கர்நாடக தேர்தலில் களமிறங்கும் கோடீசுவர வேட்பாளர்கள்
x

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் எம்.டி.பி. நாகராஜுக்கு ரூ.1,510 கோடி, டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,347 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1,510 கோடி என்று காட்டியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1,015 கோடியாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.495 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதுபோல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று கனகபுராவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில் அவருக்கும், அவரது மனைவிக்கும் சோ்த்து சுமார் ரூ.1,347 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது மனைவி பெயரில் ரூ.133 கோடி சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள சொத்துகள் டி.கே.சிவக்குமார் பெயரில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.507 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.


Next Story