கர்நாடகத்தில் 28ஆயிரம் கிராமங்களுக்கு மயான நிலம் ஒதுக்கீடு; அரசு பிரமாண பத்திரம் தாக்கல்


கர்நாடகத்தில் 28ஆயிரம் கிராமங்களுக்கு மயான நிலம் ஒதுக்கீடு; அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
x
தினத்தந்தி 10 Jun 2023 3:05 AM IST (Updated: 10 Jun 2023 2:32 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 28 ஆயிரத்து 276 கிராமங்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஐகோர்ட்டில், அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 28 ஆயிரத்து 276 கிராமங்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஐகோர்ட்டில், அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றவில்லை

கர்நாடகத்தில் அனைத்து கிராமங்களிலும் மயானங்கள் இல்லாத நிலை இருக்கக்கூடாது என்று அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் மாநிலத்தில் பல்வேறு கிராமங்களில் மயானங்கள் இல்லை என்றும், ஐகோர்ட்டு உத்தரவை அரசு பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறி கர்நாடக ஐகோர்ட்டில் பெங்களூருவை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு, ஐகோர்ட்டு நீதிபதி ஜி.நரேந்தர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, நீதிபதி முன்னிலையில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், வருவாய் துறை முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் கடாரியா வழங்கிய பிரமாண பத்திரத்தை நீதிபதி முன்னிலையில் தாக்கல் செய்திருந்தார்.

5 கிராமங்களுக்கு மட்டுமே...

அந்த பிரமாண பத்திரத்தில் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 30 ஆயிரத்து 781 கிராமங்கள் உள்ளன. அவற்றில் 2,500 கிராமங்களில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. மீதமுள்ள 28,281 கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், 28 ஆயிரத்து 276 கிராமங்களில் மயானங்களுக்காக அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 5 கிராமங்களுக்கு மட்டும் இன்னும் மயானத்திற்கான நிலம் ஒதுக்கப்படாமல் உள்ளது. உடுப்பியில் 2 கிராமங்களுக்கும், ராய்ச்சூரில் 3 கிராமங்களுக்கும் மட்டுமே நிலம் ஒதுக்கப்படவில்லை.

அந்த கிராமங்களில் அரசு நிலம் இல்லாததால், தனியார் நிலத்தில் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் 99.8 சதவீத கிராமங்களுக்கு மயானத்திற்கான நிலம் உள்ளது என்று பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 22-ந் தேதி ஒத்தி வைத்து நீதிபதி ஜி.நரேந்தர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story