கர்நாடகா; 5 உத்தரவாதங்களை அமல்படுத்தும் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும்: சித்தராமையா அறிவிப்பு


கர்நாடகா; 5 உத்தரவாதங்களை அமல்படுத்தும் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும்:  சித்தராமையா அறிவிப்பு
x

கர்நாடகாவில் காங்கிரஸ் வழங்கிய 5 உத்தரவாதங்களை அமல்படுத்துவதற்கான உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டன. அவற்றில், தேர்தலையொட்டி மக்களுக்கு 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அளித்து இருந்தது. அவையாவன,

கிரக ஜோதி எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரக லட்சுமி எனப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2,000 வழங்குதல், அன்ன பாக்யா எனப்படும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, யுவ நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாதோருக்கு 2 ஆண்டுகளுக்கு அலவன்ஸ் தொகை (பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500) வழங்குவது, சக்தி எனப்படும் திட்டத்தின் கீழ் கர்நாடகா முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் ஆகிய 5 உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், கர்நாடகாவில் பெங்களூருவில் முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி இன்று பதவியேற்று கொண்டனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை செய்து வைத்து உள்ளார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் வழங்கிய 5 உத்தரவாதங்கள் மந்திரி சபை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டு, அவற்றை அமல்படுத்துவதற்கான உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என அறிவித்து உள்ளார். இந்த உத்தரவாதங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என கூறப்படுகிறது.


Next Story