கர்நாடகத்தில் அவசர கதியில் உத்தரவாத திட்டங்கள் அமல்?; அரசியல் கட்சியினர் கருத்து


கர்நாடகத்தில் அவசர கதியில் உத்தரவாத திட்டங்கள் அமல்?; அரசியல் கட்சியினர் கருத்து
x

கர்நாடகத்தில் அவசர கதியில் உத்தரவாத திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்து அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சியின் 5 உத்தரவாத திட்டங்களை அறிவித்தது. அதில் ஒன்று அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம். இந்த திட்டம் கடந்த 11-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது அரசின் சொகுசு பஸ்களை தவிர அனைத்து விதமான பஸ்களிலும் பெண்கள் மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். இதனால் இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஆனால் ஆட்டோக்கள், தனியார் வாகனங்களில் சென்று வந்த பலரும் தற்போது அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள படையெடுத்து வருகிறார்கள். இதனால் பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பெங்களூருவில் இயங்கும் பி.எம்.டி.சி. பஸ்களை தவிர மற்ற அரசு போக்குவரத்து கழக பஸ்களில் 50 சதவீத இருக்கைகள் ஆண்களுக்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பெண்கள் கூட்டம் அரசு பஸ்களில் அலைமோதுவதால், ஆண்கள் அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் கொடுத்தும் இருக்கைகள் கிடைக்காமல் நின்று கொண்டு பயணிக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. அரசு பஸ்களில் போட்டிப்போட்டுக் கொண்டு பெண்கள் ஏறுவதால் பஸ்களின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் உடைந்த சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும், அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 1,696 பணி இடங்களை உடனே நிரப்பவும் போக்குவரத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது ஒரு புறம் என்றால் மறுபுறம் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் சேர விண்ணப்பிக்கும் பணி கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கியது. இதனால் பெங்களூரு ஒன், கிராம ஒன், கர்நாடக ஒன் மையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். அனைத்து மையங்களிலும் சேவா சிந்து எனும் இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும். இதனால் அந்த சேவா சிந்து இணையதள சர்வர் அடிக்கடி முடங்கி வருகிறது. இதன் காரணமாக மணி கணக்கில் பொதுமக்கள் காத்திருந்து இலவச மின்சார திட்டத்தில் சேர விண்ணப்பிக்கும் இக்கட்டான நிலை உள்ளது.

அதுபோல் கர்நாடக அரசு ஜூலை 1-ந்தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு அன்னபாக்ய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் மாநிலங்களுக்கு வழங்கும் அரிசியை மத்திய அரசு திடீரென்று நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசால் இந்த 10 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன்காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் அரிசி விலை கூடுதலாக இருப்பதால் கர்நாடக அரசு செய்வதறியாது மதில் மேல் பூனையாக பரிதவித்து வருகிறது.

அதுபோல் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரமும், டிப்ளமோ பட்டதாரிகளுக்கு தலா ரூ.1,500 வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தேர்வு செய்து வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்தை தவிர்த்து மற்ற உத்தரவாத திட்டங்களை செயல்படுத்துவதாக அவசர கதியில் அரசு அறிவித்ததாகவும், தெளிவான திட்டமிடுதல் இல்லாததால் அந்த திட்டங்களை அமல்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதாக எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் குற்றம்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:-

மக்கள் மத்தியில் வரவேற்பு

பெங்களூரு காந்திநகர் பிளாக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான சரவணா:-

கடந்த பா.ஜனதா ஆட்சியிலேயே அரசு கடனில் தான் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் தான் கர்நாடக அரசு கடனில் தவிப்பதாக பா.ஜனதாவினர் பொய் புகார் கூறுகிறார்கள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பி.பி.எல். கார்டுதாரர்களுக்கு 7 கிலோ அரிசி வழங்கினோம். அது பா.ஜனதா ஆட்சியில் 5 கிலோவாக குறைத்தனர். இதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 10 கிலோ அரிசி வழங்குவோம் என அறிவித்தோம். அந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுபோல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச திட்டத்தை தொடங்கிவிட்டோம். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இலவச பஸ் பயண திட்டத்தால் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு செல்வோர், தூய்மை பணியாளர்கள் மிகுந்த பயன் அடைந்துள்ளனர். காங்கிரசின் உத்தரவாத திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதை பா.ஜனதாவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கர்நாடகத்தில் 25 பா.ஜனதா எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் இதுவரை கர்நாடக வளர்ச்சி பற்றியும், திட்டங்கள் பற்றியும் எதுவும் பேசவில்லை. ஆனால் இப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், காங்கிரஸ் மீது குற்றம்சாட்டுகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. எந்த மாநிலத்திலும் அரசுக்கு கடன் இல்லாமல் இல்ைல. 5 உத்தரவாத திட்டங்களையும் நாங்கள் சரியான திட்டமிடலுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறுகிறது.

மின்கட்டணத்தை உயர்த்திவிட்டதாக கூறுகிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது 2 முறை மின்கட்டணத்தை உயர்த்தினர். அதன் விளைவாக தான் தற்போது மின்கட்டணம் இருமடங்காக உள்ளது. அடுத்த மாதம் முதல் 200 யூனிட் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு 200 யூனிட் மின்சாரத்தை உபயோகப்படுத்தினாலும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து குறைகூறி வருகிறார்கள். மக்கள் விரும்பி காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அவர்களுக்காக அந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு நம்மால் செய்ய முடியாததை காங்கிரஸ் செய்கிறதே என்ற பொறாமையில் இவ்வாறு பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

முன்ஏற்பாடுகளை செய்யாமல்...

பெங்களூரு தர்மராயசாமி கோவில் வார்டு முன்னாள் கவுன்சிலரும், பா.ஜனதா பிரமுகருமான தன்ராஜ்:-

காங்கிரஸ் கட்சி முன்ஏற்பாடுகள் எதுவும் ேயாசனை செய்யாமல் 5 உத்தரவாத திட்டங்களையும் அறிவித்து விட்டது. 5 ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தால் போதும் அக்கட்சியினர் எண்ணியதன் விளைவு தான் இது. அரிசி வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகிறார்கள். மத்திய அரசு தான் அனைத்து மாநிலங்களுக்கும் 5 கிலோ அரிசி வழங்கி வருகிறது. அதுபோல் தான் கர்நாடகத்திற்கும் 5 கிலோ அரிசி வழங்குகிறது. ஆனால் 10 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்று காங்கிரசார் கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்.

ஒருவேளை கர்நாடகத்திற்கு காங்கிரசார் கேட்பது போல் அரிசி கொடுத்தால், மற்ற மாநிலங்களிலும் கூடுதல் அரிசி கேட்பார்கள். இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அதுபோல் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திலும் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார்கள். எந்தவிதமான முன் ஏற்பாடும் இல்லாமல் காங்கிரஸ் அவசர கதியில் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக கூறி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இவ்வாறு அக்கட்சி செயல்படுகிறது. இந்த திட்டங்களால் இன்னும் ஓராண்டில் அரசு கஜானா திவாலாகிவிடும். எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலி

சிவமொக்கா மாநகர பா.ஜனதா கட்சியின் வியாபாரிகள் நலன் பிரிவு தலைவர் சிவக்குமார்:-

காங்கிரஸ் அளித்த உத்தரவாதத்தை நம்பி மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்தனர். காங்கிரஸ் ஆட்சியும் அமைந்துவிட்டது. மந்திரிகளும் பதவி ஏற்றுவிட்டனர். ஆனால் வாக்குறுதிகளை அவசர கதியில் அறிவித்ததால், அவர்களால் அதை அமல்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இலவச பஸ் பயண திட்டத்தால், பெண்கள் கூட்டம் அரசு பஸ்களில் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், கூலி வேலைக்கு செல்லும் ஆண்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். இதில் நாள் ஒன்றுக்கு கோடி கணக்கான ரூபாய் அரசுக்கு செலவாகி வருகிறது. இதனால் அரசு கஜானா விரைவில் திவாலாகிவிடும். 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை அறிவித்துவிட்டு, இருமடங்கு மின்சார கட்டணத்தை வசூலிக்கிறார்கள். அத்துடன் இந்த திட்டத்தில் பயன்பெற பல நிபந்தனைகளையும் விதித்து வருகிறார்கள். மொத்தத்தில் நடைமுறைப்படுத்த முடியாத பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் இன்று பொதுமக்கள் இடையே அவமானப்பட்டு நிற்கிறது. இவை அனைத்தும் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநிலத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.

சிக்கமகளூரு நகரசபை பா.ஜனதா கவுன்சிலர் மதுகுமார்:-

காங்கிரஸ் கட்சி அதிகார ஆசையால் 5 திட்டங்களையும் அறிவித்துவிட்டது. எந்தவித முன்ஏற்பாடும் இல்லாமல் அறிவித்ததால் தற்போது அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாத இக்கட்டான நிலையில் அக்கட்சி உள்ளது. இலவச பஸ் பயண திட்டத்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழந்து வருகிறது. அதுபோல் இலவச மின்சார திட்டம், 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இந்த அரசு எப்படி செயல்படுத்த போகிறது என்பது தெரியவில்லை. இந்த திட்டங்களால் மக்கள் மீது வீண் வரிச்சுமை கூடும். காங்கிரசின் இந்த செயல்பாட்டுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

பொறுமையாக இருக்க வேண்டும்

சிக்கமகளூரு 23-வது வார்டு கவுன்சிலர் (எஸ்.டி.பி.ஐ. கட்சி) மஞ்சுளா சீனிவாஸ்:-

காங்கிரஸ் ஆட்சி 5 இலவச திட்டங்களை கொண்டு வருவதாக கூறியதால் மட்டும் வெற்றி பெறவில்லை. பா.ஜனதா கட்சியின் சர்வாதிகார ஆட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் அவர்கள் இந்த முறை காங்கிரஸ் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். 5 இலவச திட்டங்களையும் நடவடிக்கைக்கு கொண்டு வருவதற்கு முன்பு பொதுமக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சில இடங்களில் மக்கள் இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்தாத நிலையில், மின்கட்டணம் செலுத்த மாட்டோம் என்று அழுத்தம் கொடுத்தனர். இதனால் அவசர கதியில் அந்த திட்டங்களை செயல்படுத்தும் நிலைக்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டு உள்ளது. 5 திட்டங்களை காங்கிரஸ் கட்சி செயல்படுத்துவது உறுதி. அதற்கான நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது 13 முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்த சித்தராமையாவுக்கு தெரியும். அவர் விரைவில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். எனவே அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் அமல்படுத்தும். எனவே பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் பொறுமையாக இருக்க வேண்டும்.

சாதாரண விஷயம் அல்ல

கோலார் தங்கவயலை சேர்ந்தவரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ராஜேந்திரன்:-

கர்நாடகாவில் இத்தனை ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்தது. அவர்களின் ஆட்சியில் மாநில மக்களுக்கு எந்த ஒரு சிறப்பான வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு மாநில மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த திட்டங்கள் மாநில மக்கள் வளம் பெறக்கூடிய திட்டங்களாகும். இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றால் சாதாரண விஷயம் அல்ல. முக்கியமாக நிதி தேவை. ஆனால் கடந்த ஆட்சியிலேயே நிதி இல்லாமல் அரசு கடனில் சிக்கியுள்ளது. நிதி ஆதாரத்தை பெருக்கி இந்த திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்தும்.

கோலார் தங்கவயல் பா.ஜனதா பிரமுகர் கோபால்:-

தேர்தலின் போது உரிய திட்டமிடுதல் இல்லாமல் 5 இலவச திட்டங்களை காங்கிரஸ் அறிவித்தது, முதல் குற்றமாகும். மாநில மக்களிடம் ஓட்டுக்களை பெறவேண்டும் என்ற நோக்கில் அவசர கதியில் இந்த திட்டங்களை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதன் விளைவு தான் இ்ன்று மக்கள் அவதிப்படுகிறார்கள். அரிசி பற்றாக்குறை, 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் சேர விண்ணப்பிக்கும் விவகாரத்தில் சர்வர் முடக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி தப்பிக்க நினைப்பது கண்டனத்துக்கு உரியது. காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.


Related Tags :
Next Story