கர்நாடக மாநில வெற்றி, எல்லா மாநிலங்களிலும் தொடரும் - ராகுல் காந்தி


கர்நாடக மாநில வெற்றி, எல்லா மாநிலங்களிலும் தொடரும் - ராகுல் காந்தி
x

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி, எல்லா மாநிலங்களிலும் தொடரும் என்று ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் உற்சாகம்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இது அந்தக் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தைத் தந்துள்ளது. இந்த வெற்றியை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சித்தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துக்கொண்டாடினர்.

கர்நாடக மக்களுக்கு நன்றி

இந்தத் தேர்தல் வெற்றியையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் தந்துள்ள வெற்றிக்காக, கர்நாடக மாநில மக்களுக்கும், காங்கிரஸ் கட்சித்தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் நான் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக சட்டசபை தேர்தலில் நாங்கள் வெறுப்பையும், மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் போட்டியிட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் அன்புடன்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட்டோம். கர்நாடக மாநிலத்தில் வெறுப்புச்சந்தை மூடப்பட்டு விட்டது. அன்புக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

எல்லா மாநிலங்களிலும் தொடரும்

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒரு பக்கம் நட்பு முதலாளிகளின் பலமும், மறுபுறம் ஏழை மக்களின் பலமும் இருந்தது. இதில் ஏழை மக்களின் பலம் நட்பு முதலாளிகளின் பலத்தைத் தோற்கடித்துள்ளது. இது எல்லா மாநிலங்களிலும் தொடரும். கர்நாடக சட்டசபை தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி எல்லோருக்குமான வெற்றி ஆகும். முதலில் இது கர்நாடக மக்களின் வெற்றி. கர்நாடக மாநில மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம். நாங்கள் அவற்றை முதல் நாளில், முதல் மந்திரிசபை கூட்டத்தில் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

'வெல்ல முடியாதவர் ராகுல்'

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயண வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி சமூக ஊடகத்தில் வெளியிட்டது. அதில் ராகுல், சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களுடன் இருக்கிறார். அதன் பின்னணியில் 'அன்ஸ்டாப்பபுள்' என்ற பாடல் இசை ஒலித்தது.

இந்த வீடியோவில், ராகுல் வெல்ல முடியாதவர் என்று சித்தரிப்பதுபோல "நான் வெல்ல முடியாதவன், நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஆமாம், இன்று என்னைத் தடுக்க முடியாது" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.


Next Story