கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்: குமாரசாமி தேர்தல் அறிக்கை


கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்: குமாரசாமி தேர்தல் அறிக்கை
x

கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பெங்களூரு ,

கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. அதேபோல், கர்நாடகாவில் கிங் மேக்கர் கனவுடன் வலம் வரும் ஜேடிஎஸ் கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. குமாரசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றால் நாங்கள் அமல்படுத்த போகும் திட்டங்களை இதில் கூறியுள்ளோம். குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படும். 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். முதல் நிலை கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான பொருளாதாரத்தில் நலவுற்ற மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ள மேகதாது திட்டம் அமல்படுத்தப்படும்" போன்ற கவர்ச்சிகர வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.


Next Story