கர்நாடக சட்டசபை தேர்தலில் 72.67 % வாக்குப்பதிவு


கர்நாடக சட்டசபை தேர்தலில் 72.67 % வாக்குப்பதிவு
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 10 May 2023 6:40 PM GMT (Updated: 11 May 2023 12:18 AM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இதில் 72.67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 20-ந் தேதி முடிந்தது. இங்கு 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை வேட்பாளர் மட்டும் களத்தில் உள்ளார்.

ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனால் காலை 7.30 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்துவிட்டு சென்றனர்.

பெங்களூரு மாநகரில் ஓட்டுப்பதிவு எந்த விதமான வன்முறையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவில் வன்முறைகள், வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளுகள் நடைபெற்றன. பெரும்பாலும் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. விஜயாப்புரா மாவட்டம் மசபிநாலா கிராமத்தில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வட்ட அதிகாரி காரில் கூடுதல் மின்னணு வாக்கு எந்திரங்களுடன் வந்தார்.

இதை பார்த்த கிராம மக்கள், தேர்தலில் ஏதோ முறைகேடு செய்ய வந்திருப்பதாக கருதி சந்தேகம் அடைந்து அந்த காரை தடுத்து நிறுத்தினர். அதில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு எந்திரங்களை வெளியே எடுத்து நடுரோட்டில் போட்டு அடித்து உடைத்து நொறுக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனந்த்குமார், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு போலீஸ் படையும் விரைந்து வந்தது. வன்முறையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலை 9 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு 8.26 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 52.18 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கொன்றும், இங்கொன்றுமான சம்பவங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மொத்தம் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தேர்தலில் சுமார் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பா.ஜனதா 104 இடங்களையும், காங்கிரஸ் 80 தொகுதிகளையும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 இடங்களையும் கைப்பற்றின. அப்போது எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(13-ந் தேதி) நடைபெற உள்ளது.


Next Story