காஷ்மீர் என்கவுண்ட்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; பாகிஸ்தானிய பொருட்கள் பறிமுதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ரஜோரி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நர்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் ஈடுபட்டனர். இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதன்பின்னர், அந்த பகுதியில் இருந்து மருந்துகள் உள்ளிட்ட போர் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. அந்த மருந்து பொருட்களில், பாகிஸ்தான் நாட்டின் அடையாளங்கள் தென்பட்டன.
என்கவுண்ட்டர் இன்று மாலை வரை நீடித்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 7-ந்தேதியில் இருந்து 2 பயங்கரவாதிகளின் இயக்கம் பற்றி இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் கண்காணித்து வந்தனர் என்று பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் சுனீல் பர்த்வால் கூறியுள்ளார்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு நேற்று சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் ஒரு பயங்கரவாதி உயிரிழந்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலின்போது, லேபரடார் வகையை சேர்ந்த ராணுவத்தின் பெண் மோப்ப நாய் கென்ட் (வயது 6) முன்னே பாய்ந்து உயிரிழந்தது. தன்னுடைய பாதுகாவலரை பாதுகாக்கும் வகையில் அது உயிர் தியாகம் செய்தது. அதன் இறுதி சடங்குகள் இன்று நடைபெற்றன.