கேதார்நாத் தாம் புனித யாத்திரை; 37 பக்தர்கள் உயிரிழப்பு


கேதார்நாத் தாம் புனித யாத்திரை; 37 பக்தர்கள் உயிரிழப்பு
x

கேதார்நாத் தாம் புனித யாத்திரை செல்பவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து உள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கேதார்நாத் கோவில், கடந்த ஆண்டு நவம்பர் 6ந்தேதி குளிர்கால சூழலால் மூடப்பட்டது. இந்த நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு கடந்த 6ந்தேதி பக்தர்களுக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பிரார்த்தனை நடத்திய பிறகு காலை 6.25 மணிக்கு கோவிலின் பிரதான கதவு திறக்கப்பட்டது. ராணுவத்தின் இசைக்குழு, பக்தி பாடல்களை இசைத்தது. அப்போது, சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்திருந்தனர்.

முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமியும் வந்திருந்தார். அவர் பக்தர்களுக்கு வாழ்த்து கூறினார். முதல்-மந்திரி முன்னிலையில், உலக அமைதி மற்றும் வளமையை வேண்டி, பிரதமர் மோடி சார்பில் ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது.

இதுபோல், சார் தாம் யாத்திரைக்காக கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை கடந்த 3ந்தேதி திறக்கப்பட்டது. மற்றொரு கோவிலான பத்ரிநாத் கோவில் நடை கடந்த 8ந்தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில், யாத்திரை செல்பவர்களில் பலர் உடல்நல குறைவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து வருகின்றனர். இதில், கேதர்நாத் தாம் யாத்திரையில் மாரடைப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்து இருந்தது. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 3ந்தேதி தொடங்கி நடந்து வரும் உத்தரகாண்டின் சார்தாம் யாத்திரையில் 57 பக்தர்கள் இதுவரை உயிரிழந்து உள்ளனர். நாள்தோறும் கங்கோத்ரியில் 8 ஆயிரம் பக்தர்களும், பத்ரிநாத்தில் 16 ஆயிரம் பக்தர்களும், கேதர்நாத்தில் 13 ஆயிரம் பக்தர்களும் மற்றும் யமுனோத்ரியில் 5 ஆயிரம் பக்தர்களும் செல்ல உத்தரகாண்ட் அரசு அனுமதி அளிக்கிறது.


Next Story