சுவாதி மாலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்


சுவாதி மாலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 17 May 2024 2:03 PM IST (Updated: 17 May 2024 4:21 PM IST)
t-max-icont-min-icon

தனது கட்சி பெண் எம்.பி. மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏற்றுக்கொள்ள முடியாதது என நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தொடக்கத்தில் மவுனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் சுவாதி மாலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் எனவும், இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்தது. மேலும் பிபவ் குமார் கெஜ்ரிவாலின் உதவியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பா.ஜ.க.வினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், இது குறித்து பேசியதாவது;

டெல்லியில் உள்ள பெண்கள் கேட்கிறார்கள் - முதல் மந்திரியால் (டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்) நகரில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியுமா? இந்த சம்பவத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் காரணம். கெஜ்ரிவால் தனது கட்சி பெண் எம்.பி. மீதான தாக்குதல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது நம்பமுடியாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுவதுடன், மன்னிப்பு கேட்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story