பா.ஜ.க.வின் மத்திய முகமைகளால் முதலில் கைது செய்யப்பட போவது கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


பா.ஜ.க.வின் மத்திய முகமைகளால் முதலில் கைது செய்யப்பட போவது கெஜ்ரிவால்:  ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
x

இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய தலைவர்களை கைது செய்யும் திட்டம் ஒன்றை பா.ஜ.க. அரசு வைத்துள்ளது என ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவர் மற்றும் எம்.பி.யான ராகவ் சத்தா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்தியா கூட்டணி உருவாக்கம் ஆனது, பா.ஜ.க. தலைவர்களை அச்சமடைய செய்துள்ளது.

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைவோம் என அவர்கள் பயந்து போயுள்ளனர். அதனால், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களை சிறையில் தள்ளுவது என்ற ராஜதந்திர வேலையில் ஆளும் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.

முக்கிய தலைவர்கள் சிறையில் இருக்கும்போது, அவர்கள் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும். அவர்களுடைய கட்சிகளையும் நடத்த முடியும்?

இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டால், அதன்பின் பா.ஜ.க.வினர் திறம்பட பிரசாரத்தில் ஈடுபட முடியும். அந்த வழியில் அவர்கள் வெற்றியும் பெற முடியும் என ராகவ் பேசியுள்ளார்.

இதன்படி, பா.ஜ.க.வின் மத்திய முகமைகளால் முதலில் கைது செய்யப்பட போவது கெஜ்ரிவால் என்று எங்களுடைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில், அனைத்து 7 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணையில் நவம்பர் 2-ந்தேதி நேரில் ஆஜராகும்படி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை முன்பே சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால், கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சமடைந்து உள்ளது.

கெஜ்ரிவாலுக்கு சம்மன் என்ற செய்தி வெளியானதும், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை ஆம் ஆத்மி தலைவர்கள் குறை கூறி வருகின்றனர்.


Next Story