கேரளா: பாலியல் வன்கொடுமை வழக்கில் பி.சி. ஜார்ஜ் கைது; ஜாமீனில் விடுதலை


கேரளா:  பாலியல் வன்கொடுமை வழக்கில் பி.சி. ஜார்ஜ் கைது; ஜாமீனில் விடுதலை
x

கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட மூத்த அரசியல்வாதி பி.சி. ஜார்ஜ் ஜாமீனில் விடுதலையானார்.



திருவனந்தபுரம்,




கேரளாவில் பூஞ்சார் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் (வயது 70). இவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

சோலார் பேனல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில், கடந்த பிப்ரவரி 10ந்தேதி தைக்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு தன்னை அழைத்ததன் பேரில், அங்கு சென்ற தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இதுதவிர, செல்போனில் அநாகரீகமான முறையில் குறுஞ்செய்திகளையும் ஜார்ஜ் அனுப்பினார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், பி.சி. ஜார்ஜ் கன்டோன்மென்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், திருவனந்தபுரம் கோர்ட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ், ஜாமீன் வழங்க கோரி மனு செய்துள்ளார். இதன் மீது இன்று நடந்த விசாரணையில் ஜார்ஜுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் விடுதலையானார்.


Next Story