கேரளா: வீட்டில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பா.ஜ.க. தொண்டர், மனைவி காயம்


கேரளா:  வீட்டில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பா.ஜ.க. தொண்டர், மனைவி காயம்
x

கேரளாவில் பா.ஜ.க. தொண்டர் வீட்டில் வெடித்த வெடிகுண்டால், 3 கி.மீ. தொலைவுக்கு அதிர்வுகள் உணரப்பட்டன என உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.



கண்ணூர்,


கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் காக்கயங்காடு பகுதியில் பா.ஜ.க. தொண்டரான சந்தோஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டின் சமையலறை பின்பகுதியில் நேற்று இரவு திடீரென்று வெடிகுண்டு ஒன்று வெடித்து உள்ளது.

இந்த சம்பவத்தில், சந்தோஷ், அவரது மனைவி லசித்தா படுகாயம் அடைந்து உள்ளனர். இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் இன்று சம்பவ பகுதியில் ஆய்வு நடத்தினர்.

வெடிகுண்டு வெடித்ததும் 3 கி.மீ. தொலைவுக்கு அதன் அதிர்வுகள் உணரப்பட்டன என உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். சந்தோஷின் கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்ததும் போலீசாரும் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்தபோது, சந்தோஷின் தாயார் மற்றும் குழந்தைகள் வீட்டின் வேறு அறையில் இருந்தனர். அதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கு முன்னரும் இதேபோன்ற சம்பவம் நடந்தது என அந்த பகுதியினர் கூறுகின்றனர்.

அப்போது சந்தோஷின் விரல்கள் துண்டிக்கப்பட்டன என அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, சி.பி.எம். மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் கூடி, பதற்ற நிலை காணப்பட்டது.

இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. ஜோசப் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்டின் ஜார்ஜ் தீவிர விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர். வெடிகுண்டு வெடித்த வீடு பற்றிய விவரங்கள் சமூக ஊடகத்தில் வைரலாக பரவின.

வெடிகுண்டு தயாரித்தபோது, வெடித்து உள்ளது என தகவல்கள் கூறுகின்றன. இந்த வெடிகுண்டு தயாரிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story