கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மரணம் : நாளை உடல் அடக்கம்


கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மரணம் : நாளை உடல் அடக்கம்
x

பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மரணம் அடைந்தார்.

திருவனந்தபுரம்,

பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னாள் முதல்-மந்திரி

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தூணாக விளங்கியவர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட உம்மன்சாண்டி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் உம்மன்சாண்டி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

அப்போது அவரது மனைவி மரியம்மா உம்மன், மகன் சாண்டி உம்மன், மகள்கள் அச்சு உம்மன், மரியா உம்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது உடல் பெங்களூரு இந்திராநகரில் உள்ள உம்மன் சாண்டியின் நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெங்களூருவில் காலை 11 மணியளவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உம்மன் சாண்டி மரணம் அடைந்ததால், அந்த கூட்டம் ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது.

சோனியா ஆறுதல்

அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு வந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இந்திராநகருக்கு சென்று உம்மன்சாண்டி உடலுக்கு அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் உம்மன் சாண்டியின் மனைவி மரியம்மா உம்மன் மற்றும் குடும்பத்தினருக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்கள்.

நாளை உடல் அடக்கம்

இதுபோல், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூருவுக்கு வந்திருந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திராநகருக்கு சென்று உம்மன் சாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தலைவர்கள் அஞ்சலிக்கு பின்னர் விமானம் மூலம் உம்மன் சாண்டியின் உடல் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு தலைமை செயலக தர்பார் அரங்கில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மந்திரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு உடல் அடக்கம் நடக்கிறது.

உம்மன்சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உண்மையான மக்கள் தலைவர்

இதற்கிடையே உம்மன் சாண்டி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில், 'கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி இறுதி மரியாதை செலுத்தினேன். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆளுமை மற்றும் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான மக்கள் தலைவர். உம்மன் சாண்டி குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறப் பட்டுள்ளது.

இதேபோன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'உம்மன்சாண்டி மறைவு நாட்டுக்கும், கேரளாவுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என கூறி உள்ளார்.


Next Story