ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்.. வாடகை வீட்டில் சடலமாக மீட்பு
ஜெய்சன் தாமஸ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், மற்றவர்கள் படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கோட்டயம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், நஞ்சுபாறையைச் சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ் (வயது 44). இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலையில் இவர்கள் அனைவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெய்சன் தாமஸ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் படுக்கையில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே, தாமஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.