கேரளா: அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் டாக்டர் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை


கேரளா: அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் டாக்டர் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 27 March 2024 1:33 PM IST (Updated: 27 March 2024 4:21 PM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த பெண் மருத்துவர் அவரது அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வெள்ளநாடு பகுதியைச் சேர்ந்த அபிராமி பாலகிருஷ்ணன்(வயது 30), திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று அபிராமி, அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அபிராமியின் குடும்பத்தினர் அவரை செல்போன் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அழைப்பை எடுக்காததால், குடியிருப்பின் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

இதையடுத்து அபிராமியின் அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அபிராமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அபிராமி தனது உடலில் ஊசி மூலம் சில மருந்துகளை செலுத்தியுள்ளார் எனவும், இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இதனை உறுதி செய்ய முடியும் என்று போலீசார் கூறினர். அபிராமி பாலகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு டாக்டரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story