பா.ஜ.க.வுடன் கட்சியை இணைத்தார் கேரளாவின் பி.சி.ஜார்ஜ்


பா.ஜ.க.வுடன் கட்சியை இணைத்தார் கேரளாவின் பி.சி.ஜார்ஜ்
x
தினத்தந்தி 31 Jan 2024 4:18 PM IST (Updated: 31 Jan 2024 4:34 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் தொகுதியில் இருந்து பி.சி.ஜார்ஜ் 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடெல்லி:

கேரளாவைச் சேர்ந்த மதச்சார்பற்ற கேரள ஜனபக்சம் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், இன்று தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தார்.

பி.சி.ஜார்ஜ், அவரது மகன் ஷான் மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகம் சென்று, கட்சியின் பொறுப்பாளர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைந்தனர்.

அதன்பின்னர் பா.ஜ.க. தேசிய செயலாளர் அனில் அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று பி.சி.ஜார்ஜ் தலைமையிலான மதச்சார்பற்ற கேரள ஜனபக்சம் கட்சி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மீதான முழு நம்பிக்கையை இந்த நிகழ்வு காட்டுகிறது.

பா.ஜ.க.வுக்கு அவர்களை வரவேற்கிறேன். ஜகபக்சம் கட்சியின் வருகையால் கேரளாவில் பா.ஜ.க. மேலும் வளரும். மேலும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின் திட்டத்திற்கு பங்களிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பி.சி. ஜார்ஜ் இதற்கு முன்பு, கேரள காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மாணி) மற்றும் மதச்சார்பற்ற கேரள காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் தொகுதியில் இருந்து 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு சொந்த கட்சி தொடங்கினார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துள்ளார்.


Next Story