பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் சந்திப்பு...!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி,
மத்திய வெளியுறவுத் துறை சார்பில் தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் மாநாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வகையில் பீட்டர்சன் இந்தியா வந்துள்ளார். அவர் அடுத்த சில நாட்கள் இந்தியாவில்தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு வருவது தனக்கு ஊக்கம் கொடுப்பதாகவும், இந்தியாவின் விருந்தோம்பல் குறித்தும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுவீட் செய்திருந்தார்.
நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்தநிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
உங்களை பார்க்க மீண்டும் ஆவலுடன் காத்திருக்கிறேன் சார் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் டுவீட் செய்துள்ளார்.
கடந்த 2004 முதல் 2014 வரை இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடியவர் பீட்டர்சன். 104 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடி 13,797 ரன்கள் எடுத்துள்ளார்.