நாடாளுமன்றத்தை மத்திய அரசு 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக்கி விட்டது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு


நாடாளுமன்றத்தை மத்திய அரசு ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கி விட்டது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
x

கோப்புப்படம்

நாடாளுமன்றத்தை மத்திய அரசு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் வர்த்தக காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசு மீது கடுமையாக சாடினார்.

தனது உரையில் அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் எங்கள் கருத்துகளை கூற முயன்றால், அதற்கு அனுமதிப்பது இல்லை. எங்கள் எம்.பி.க்களுக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. பெண் எம்.பி. ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏனென்றால் அதானி விவகாரத்தில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். மக்கள் பிரச்சினையை எழுப்பினார்கள்.

ரூ.12 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த 2004-ம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

இது என்ன மாயம்? இதைத்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பினோம், ராகுல் காந்தி எழுப்பினார், திக்விஜய சிங் எழுப்பினார். ஆனால் எங்கள் கருத்துகள் நீக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தை மத்திய அரசு ஒரு ரப்பர் ஸ்டாம்பாக மாற்றி விட்டது.

2 கோடி வேலைகள் எங்கே?

இரும்பு ஆலைகள், ஐ.ஐ.டி.க்கள், பெல், இஸ்ரோ போன்ற நாட்டின் முக்கிய சொத்துகளை உருவாக்கியது யார்? நாங்கள் போலிகள் அல்ல, நாட்டை உருவாக்கியவர்கள். லட்சக்கணக்கான மக்கள் இந்த நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.

ஆனால் நீங்கள் வாக்களித்த ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே? 30 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்குப் பதிலாக, துணைச் செயலாளர் செய்யக்கூடிய பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதும், மக்களுக்கு வளமான வாழ்வை வழங்குவதும் உங்கள் அரசின் கடமை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சி

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் எனவும், நட்பு கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

இல்லாவிட்டால் சர்வாதிகாரம் ஏற்பட்டு ஜனநாயகம், அரசியல் சாசனம் என அனைத்தையும் அழித்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story