மாட்டிறைச்சி வியாபாரியை கடத்தி பணம் பறிப்பு- 4 பேர் கைது


மாட்டிறைச்சி வியாபாரியை கடத்தி பணம் பறிப்பு- 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

மாட்டிறைச்சி வியாபாரியை கடத்தி பணம் பறித்த இறைச்சி கடைக்காரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மைகோ லே-அவுட்:-

மாட்டிறைச்சி வியாபாரி கடத்தல்

ராமநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பயாஜ். இவர், மாட்டு இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். பெங்களூருவுக்கு தினமும் வாகனத்தில் மாட்டிறைச்சியை கொண்டு வந்து, பல்வேறு கடைகளுக்கு மொத்தமாக பயாஜ் விற்பனை செய்து வருகிறார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநகரில் இருந்து சரக்கு வாகனத்தில் மாட்டு இறைச்சியை பயாஜ் பெங்களூருவுக்கு கொண்டு வந்தார்.

பெங்களூரு மைகோ லே-அவுட் சிக்னலில் வைத்து பயாஜ் வாகனத்தை வழிமறித்த 3 பேர், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் அவரை, வாகனத்துடன் கடத்தி சென்று ரூ.10 ஆயிரம், சரக்கு வாகனம் மற்றும் மாட்டிறைச்சியையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

4 பேர் கைது

இதுகுறித்து ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், பயாஜை கடத்தியதாக முகமது, மது, கார்த்திக், தினேஷ் ஆகிய 4 பேரையும் ஆடுகோடி போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், முகமது கடைக்கு பயாஜ் தான் மாட்டிறைச்சி விற்று வந்துள்ளார். முகமதுவுக்கு கடன் ஏற்பட்டதால், பயாஜை கடத்தி பணம் மற்றும் மாட்டிறைச்சியை கொள்ளையடித்தும், அந்த மாட்டிறைச்சியை தனது கடையில் வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து பணம், சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 4 பேரும் விசாரணைக்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.


Next Story