உ.பி.யில் 7 மாத குழந்தை கடத்தல்; பா.ஜ.க. முக்கிய பிரமுகர் வீட்டில் இருந்து மீட்பு


உ.பி.யில் 7 மாத குழந்தை கடத்தல்; பா.ஜ.க. முக்கிய பிரமுகர் வீட்டில் இருந்து மீட்பு
x

உத்தர பிரதேச ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 7 மாத குழந்தை பா.ஜ.க. முக்கிய பிரமுகரின் வீட்டில் இருந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.



மதுரா,



உத்தர பிரதேச பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருப்பவர் வர்த்தகர் வினிதா அகர்வால். இவரும், இவரது கணவரும் சேர்ந்து, 2 டாக்டர்களிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளனர்.

ஆனால், அது கடத்தல் குழந்தை என பின்னரே தெரிய வந்துள்ளது. அகர்வால் தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். அவர்கள், தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பியுள்ளனர். இதற்காக வேறொருவரின் குழந்தையை வாங்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால், டாக்டர்களின் பின்னணியில் ஒரு கும்பலே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது மதுரா ரெயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் டாக்டர்கள், கடத்தல் நபர் உள்பட 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை மீட்புக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் வீடியோ காட்சிகளையும் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டனர். குழந்தை கடத்தல் பற்றிய வீடியோ காட்சிகளும் கிடைத்துள்ளன. அதன்படி, ரெயில்வே நிலையத்தில் தனது தாயாருடன் 7 மாத குழந்தை படுத்து உறங்குகிறது.

அந்த வழியே நபர் ஒருவர் கடந்து செல்கிறார். அதன்பின்னர், மீண்டும் அந்த பகுதிக்கு வரும் அந்நபர், குழந்தையை எடுத்து கொண்டு, நின்று கொண்டிருந்த ரெயில் ஒன்றை நோக்கி ஓடுகிறார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளன.

இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், அந்த குழந்தை, ரெயில் நிலையத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பா.ஜ.க. பிரமுகரின் வீட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட நபர் தீப் குமார் என தெரிய வந்துள்ளது. அவர்களுடன் தொடர்புடைய 2 டாக்டர்கள் ஹத்ராஸ் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு சில சுகாதார பணியாளர்களுக்கும் தொடர்பு உள்ளது. அதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story