தண்டனை என்ற பெயரில் குழந்தைகள் சித்ரவதை.. ஆதரவற்றோர் இல்லத்திற்கு சீல் வைப்பு


தண்டனை என்ற பெயரில் குழந்தைகள் சித்ரவதை.. ஆதரவற்றோர் இல்லத்திற்கு சீல் வைப்பு
x

ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம், போபால் விஜயநகரில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. அரசு சாரா தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இந்த இல்லத்தில் பராமரிக்கப்படும் பெண் குழந்தைகளை நிர்வாகம் சரியாக கவனிக்கவில்லை என்றும், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுபற்றி குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.

தவறு செய்தால் தண்டனை என்ற பெயரில் கடுமையாக சித்ரவதை செய்ததாக குழந்தைகள் கூறி உள்ளனர். அடித்தல், சூடு வைத்தல், தலைகீழாக தொங்க விட்டு, கீழே மிளகாய் வற்றலை பாத்திரத்தில் போட்டு வறுத்து புகையை சுவாசிக்கச் செய்தல் என பல வகைகளில் தண்டனை கொடுத்ததாக கூறினர். இதையடுத்து அங்கு தங்கியிருந்த 4 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை அதிகாரிகள் மீட்டு அரசு நடத்தும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் மற்றும் மற்றொரு காப்பகத்தில் சேர்த்தனர். அத்துடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சீல் வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நலக் குழு அளித்த புகாரின் அடிப்படையில், ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்புடைய 5 பெண்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 4 வயது குழந்தை அழுக்கான உடை அணிந்ததற்காக அந்த குழந்தையை அடித்து துன்புறுத்தியதுடன், குளியலறையில் பல மணி நேரம் அடைத்து வைத்ததாகவும், இரண்டு நாட்கள் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டதாகவும் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனமோ, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இது ஆதரவற்றோர் இல்லம் அல்ல, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் வெறும் 5 ரூபாய் வருடாந்திர கட்டணத்தில் பராமரிக்கப்படும் ஒரு தனி விடுதி என்று தொண்டு நிறுவனத்தின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மேலும் தொண்டு நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விடுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளை விடுதி நிர்வாகத்திடம் அல்லது அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஹேபியஸ் கார்பஸ் மனுவில் கூறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் கூறினார்.

1 More update

Next Story