கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

மைசூரு:

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு, ராமநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பெங்களூரு, ராமநகரில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதேபோல் கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 123.82 அடியாக இருந்தது.


அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரத்து 509 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 599 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 2,283.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 359 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 19 ஆயிரத்து 375 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்படி இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 42 ஆயிரத்து 974 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டன. இந்த தண்ணீர் திருமகூடலுவில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது. தண்ணீர் குறைவான அளவில் சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story