கர்நாடக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைகிறது


கர்நாடக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைகிறது
x

கோடைகாலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. பருவமழையும் தாமதமாவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

பெங்களூரு:

கோடைகாலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. பருவமழையும் தாமதமாவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

தென்மேற்கு பருவமழை தாமதம்

கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டு மே இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகி வருகிறது. கேரள மாநிலத்தில் நேற்று முன்தினம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் கர்நாடகத்தில் இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் பருவமழை பெய்ய தாமதமாவதாலும், கோடைகாலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாத காரணத்தாலும் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதன் காரணமாக பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணை

ஏற்கனவே தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ், அணையில் இருக்கும் நீர் மூலமாக தான் பெங்களூரு, மண்டியா, மைசூரு மாவட்டங்களில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது கே.ஆர்.எஸ். அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கே.ஆர்.எஸ். அணை 124.80 அடி கொள்ளளவு கொண்டதாகும்.

தற்போது அங்கு 81 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதாவது கே.ஆர்.எஸ். அணையின் தற்போதைய நீர் இருப்பு 11 டி.எம்.சி.யாக (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும்) இருக்கிறது. அந்த அணை ஒட்டுமொத்தமாக 49 டி.எம்.சி. நீரை சேமித்து வைத்து கொள்ளலாம். கடந்த ஆண்டு (2022) இதே ஜூன் மாதத்தில் கே.ஆர்.எஸ். அணையில் 27 டி.எம்.சி. நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டுக்கு 21 டி.எம்.சி. நீர்

அதே நேரத்தில் ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 21 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். தற்போது கே.ஆர்.எஸ். அணையில் 11 டி.எம்.சி. நீர் இருந்தாலும், அவற்றில் 3 டி.எம்.சி. நீரை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோன்ற காரணங்களால் பெங்களூரு, மைசூரு, மண்டியா மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இல்லாததால் தமிழகம்-கர்நாடகம் இடையே மீண்டும் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் போக்கு உருவாகவும் வாய்ப்புள்ளது. இதுபோல், மாநிலத்தில் உள்ள முக்கியமான அணைகளில் நீர் இருப்பு கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெகுவாக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

10 ஆண்டுக்கு பின்பு...

துங்கபத்ரா அணையில் 105 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து கொள்ளலாம். ஆனால் தற்போது அங்கு வெறும் 5 டி.எம்.சி. நீர் மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 30 டி.எம்.சி. நீர் துங்கபத்ரா அணையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு துங்கபத்ராவில் வெறும் 5 டி.எம்.சி. மட்டும் தண்ணீர் உள்ளது. இதன்காரணமாக பல்லாரி, விஜயநகர், ராய்ச்சூர், கொப்பல் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுபோல், லிங்கனமக்கி அணையின் மொத்த கொள்ளளவு 151 டி.எம்.சி. ஆகும். தற்போது அந்த அணையில் 16 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு 24 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

குடிநீருக்கு தட்டுப்பாடு

இதுபோன்று, பசவசாகர், குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி உள்ளிட்ட அணைகளிலும் நீர் இருப்பு குறைந்திருப்பதுடன், பெலகாவி மாவட்டத்தில் கட்டபிரபா, மல்லபிரபா ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டதால் மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவ மழை இன்னும் சில நாட்களில் பெய்யா விட்டால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது உறுதி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதும் கூட மாநிலத்தில் கலபுரகி, குடகு மாவட்டம் மடிகேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறிய கிராமங்களில் குடிநீருக்காக மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை தாமதம் காரணமாக விவசாய பணிகளும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறாமல் இருந்து வருகிறது. கோடையிலும் சரியாக மழை பெய்யாததால் அணைகளில் நீர் இருப்பு குறைந்து வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் பருவ மழையை எதிர்பார்த்து மாநில மக்கள் காத்திருக்கின்றனர்.


Next Story