வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்- குமாரசாமி வலியுறுத்தல்
கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் குமாரசாமி கூறியுள்ளார்.
நிவாரண நிதி
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்திற்கு பிறகு வெள்ள பாதிப்புகள் தொடர்பான விவாதம் தொடங்கியது. இதில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பருவமழை தீவிரமாக பெய்து வெள்ளம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த வெள்ளத்திற்கு இதுவரை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம் அடைந்துள்ளது. இது அரசு வழங்கிய தகவல். இயற்கை பேரிடர் நிவாரண நிதி வழங்கும் விதிமுறைகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு அந்த 5 ஆண்டுகள் முடிவடைந்து மேலும் 2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை அந்த விதிகளை திருத்தவில்லை.
உதவி வழங்கப்படவில்லை
இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, இந்த சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொண்டார். அவரது இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததாக அரசு சொல்கிறது. ஆனால் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்த வீடுகளுக்கு முதல் தவணை நிதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அரசு கூறியபடி நிதி உதவி வழங்கப்படவில்லை.
மேலும் வட கர்நாடகத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதியில் உள்ள கிராமங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு அரசு வீடுகள் கட்டி கொடுத்தது. ஆனால் அங்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மக்கள் அந்த குடியிருப்புகளுக்கு செல்லவில்லை.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.