சித்தராமையா பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டாலும் அதிகாரி பொறுப்பு ஏற்க மந்திரி தடை விதிக்கிறார்; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு


சித்தராமையா பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டாலும் அதிகாரி பொறுப்பு ஏற்க மந்திரி தடை விதிக்கிறார்; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
x

சித்தராமையா பணி இடமாற்றம் செய்த அதிகாரியை, பொறுப்பு ஏற்க கூடாது என்று மந்திரி தடை விதிப்பதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

சித்தராமையா பணி இடமாற்றம் செய்த அதிகாரியை, பொறுப்பு ஏற்க கூடாது என்று மந்திரி தடை விதிப்பதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு ஜே.பி.பவனில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

40 பிளஸ் 5 சதவீத கமிஷன்

கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் பெறப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். தற்போது காங்கிரஸ் ஆட்சியில் 40 பிளஸ் 5 என 45 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் ஒரு கமிஷன் நிர்ணயித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் கமிஷன் விவகாரம் பற்றி பேசியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் நாங்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஒரு எம்.பி. கூறியதால் ரூ.675 கோடியை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்காமல் வைத்துள்ளனர். அதாவது 40 பிளஸ் 5 சதவீத கமிஷன் பெறுவதற்காக ரூ.675 கோடியை விடுவிக்காமல் வைத்துள்ளனர். அந்த எம்.பி. யார் என்பது பற்றி தெரிவிக்க விரும்பவில்லை.

பொறுப்பு ஏற்க தடை

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு பணி இடமாற்றத்திற்கும் ஏற்றார் போல் பணம் கைமாறி இருக்கிறது. அதாவது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் துறைக்கு ஏற்றார் போல் அரசுக்கு பணம் செல்கிறது. அதன்படி, முதல்-மந்திரி சித்தராமையா ஒரு அதிகாரியை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டு இருந்தார். அது ஒரு மந்திரி வசம் இருக்கும் துறைக்கு அவர் மாற்றப்பட்டு இருந்தார். ஆனால் வெளியூர் பயணத்தில் இருக்கும் மந்திரி, அந்த அதிகாரியிடம் பொறுப்பு ஏற்க தடை விதித்திருக்கிறார்.

நான் பயணத்தை முடித்து விட்டு வரும் வரை பொறுப்பு ஏற்க கூடாது என்று மந்திரி கூறி இருக்கிறார். அந்த மந்திரி வசம் இருக்கும் துறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி யார்? என்பதை காங்கிரஸ் தலைவர்களே பகிரங்கப்படுத்த வேண்டும். அந்த அதிகாரி எவ்வளவு பணம் கொடுத்து, அந்த பணி இடமாற்றத்தை வாங்கினார் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பணி இடமாற்றம் செய்யும் ஜோதி திட்டத்தையும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story