தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவுக்கு குமாரசாமி புகழாரம்


தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவுக்கு குமாரசாமி புகழாரம்
x

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை நாட்டிலேயே முதல் முறையாக குறைந்த விலைக்கு அரிசி வழங்கினார் என்று குமாரசாமி புகழாரம் சூட்டி உள்ளார்.

பெங்களூரு:-

பட்ஜெட் கூட்டம்

கர்நாடக சட்டசபை கூட்டம் கடந்த 3-ந் தேதி கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 7-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் சட்டசபை ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-

அண்ணாதுரை

கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன். இதற்காக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால் கொரோனாவுக்கு பிறகு கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் 30 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் முதல்- அமைச்சராக இருந்த அண்ணாதுரை, குறைந்த விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.

உணவு தானியங்கள்

அதைத்தொடர்ந்து ஆந்திராவில் முதல்-மந்திரியாக இருந்த என்.டி.ராமாராவ், ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கினார். கர்நாடகத்தில் தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோது ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு வழங்கப்பட்டது. அவர் பிரதமராக இருந்தபோது அனைத்து மாநிலங்களுக்கும் கிலோ ரூ.3 விலையில் அரிசி வழங்கப்பட்டது.

கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதாக சித்தராமையா கூறினார். அதற்கு பதிலாக தற்போது பணம் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். 30 சதவீதம் பேர் அந்த பணத்தை சரியான நோக்கத்திற்கு பயன்படுத்துவார்கள். மீதம் உள்ளவர்கள் அதை மதுக்கடைக்கு சென்று செலவழிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த அரசு பணத்திற்கு பதிலாக அரிசி தவிர பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட இதர உணவு தானியங்கள் வழங்கலாம். இது எனது ஆலோசனை. ஏனெனில் பல மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

200 யூனிட் மின்சாரம்

வறுமைக் கோட்டிற்கு கீழ் (பி.பி.எல்.) உள்ள ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு வங்கி கணக்கு இல்லை என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். அதுகுறித்த செய்தி ஒரு ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது. நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி செயல்பட்டுள்ளோம் என்று அரசு சொல்கிறது. ஆனால் அதன்படி முழுமையாக நடந்து கொள்ளவில்லை.

அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொன்னீர்கள். இப்போது வீட்டு இணைப்பு உள்ளவர்கள் சராசரியாக எவ்வளவு பயன்படுத்தினார்களோ அதை விட கூடுதலாக 10 சதவீத மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளீர்கள். இன்றைய சூழ்நிலையில் இலவசம் என்றால் அதை மக்கள் விரும்புகிறார்கள். உத்தரவாத திட்டங்கள் குறித்து தேர்தலுக்கு முன்பே நிபந்தனைகளை கூறி இருக்க வேண்டும். அதை செய்திருந்தால், தற்போது அரசுக்கு இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த உத்தரவாத திட்டங்களுக்கு நிபந்தனை விதிப்பது சரியல்ல.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story