கர்நாடகத்தில் 9-வது முதல்-மந்திரி குண்டுராவ்
கர்நாடகத்தின் 9-வது முதல்-மந்திரியாக குண்டுராவ் பொறுப்பேற்றார்.
கர்நாடக மாநிலத்தின் 9-வது முதல்-மந்திரி ஆர்.குண்டுராவ் ஆவார். இவர், குடகு மாவட்டம் குஷால்நகரில் கடந்த 1937-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந் தேதி பிறந்தார். பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் உடைய இவர், தனது பள்ளி பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளை வென்று உள்ளார். குஷால்நகர் டவுன் நகரசபை தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் அந்த பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து 1972-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோமவார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். மேலும் தேவராஜ் அர்ஸ் மந்திரிசபையில் மந்திரியாக பதவி வகித்து உள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற இவர் மாநிலம் முழுவதும் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ
கல்லூரிகள் திறக்க நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் மைசூருவில் உள்ள கலாமந்திரா மற்றும் பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையம் இவரது ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.
மேலும் 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யாகவும் இவர் இருந்து உள்ளார். நிர்வாகம் மற்றும் கல்வியில் கன்னட மொழிக்கு முக்கியம் கொடுத்தது, நரகுந்து, நவலகுந்து பகுதிகளில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது இவரது ஆட்சி காலத்தில் அரங்கேறியவை ஆகும். மாநில அரசியலில் துணிச்சல் மிக்க தலைவராக வலம் வந்த இவர் கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி உயிர் இழந்தார். தற்போது கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், காந்திநகர் எம்.எல்.ஏ.வுமாகவும் உள்ள தினேஷ் குண்டு ராவ் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.