குஜராத் தேர்தலில் போட்டியிடும் தினக்கூலி தொழிலாளி
குடிசைப்பகுதியில் இருந்து குஜராத் தேர்தலில் தினக்கூலி தொழிலாளி ஒருவர் போட்டியிடுகிறார்.
ஆமதாபாத்,
குஜராத்தில் வருகிற 1 மற்றும் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.இந்த தேர்தலில் காந்திநகர் வடக்கு தொகுதியில் மகேந்திர பாட்னி என்ற தினக்கூலி தொழிலாளி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
காந்தி நகர் அருகே உள்ள குடிசைப்பகுதி ஒன்றில் இவர் வசித்து வந்தார்.ஆனால் ஆடம்பர ஓட்டல் கட்டுவதற்காக அங்கிருந்த 521 குடிசைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இதனால் வீடிழந்து அருகில் உள்ள மற்றொரு குடிசைப்பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கும் அந்த மக்களுக்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடைப்பதில்லை.
எனவே அந்த குடிசைப்பகுதி மக்களின் வேண்டுகோளின்பேரில் மகேந்திர பாட்னி, சட்டசபை தேர்தலில் களமிறங்கி இருக்கிறார். இதற்காக டெபாசிட் செலுத்துவதற்கு அவரிடம் பணமில்லாத நிலையில், அதற்கான ரூ.10 ஆயிரத்தையும் குடிசைப்பகுதி மக்களே பொதுமக்களிடம் திரட்டி கொடுத்துள்ளனர்.அந்த பணத்தை ஒரு ரூபாய் நாணயங்களாக செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்து வாக்குசேகரிப்பை தொடங்கியிருக்கிறார் மகேந்திர பாட்னி.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து மகேந்திர பாட்னி கூறுகையில், 'தேர்தல் நேரங்களில் மட்டும் அரசு பிரநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் எங்களை சந்தித்து சில உறுதிகளை வழங்குவார்கள். ஆனால் தேர்தலுக்குப்பின் அவற்றை மறந்து விடுகிறார்கள். எனவே இந்த பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று நானே தேர்தலில் நிற்கிறேன்' என தெரிவித்தார்.