மிசோரம் முதல்-மந்திரியாக நாளை பதவி ஏற்கிறார் லால்துஹோமா


மிசோரம் முதல்-மந்திரியாக நாளை பதவி ஏற்கிறார் லால்துஹோமா
x

74 வயதாகும் லால்துஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா்.

மிசோரம்,

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முதல்-மந்திரியாக கட்சித் தலைவா் லால்துஹோமா தோ்வு செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

இந்த நிலையில், மாநில முதல்-மந்திரியாக லால்துஹோமா நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. 74 வயதாகும் லால்துஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story